பள்ளி மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு: விரைவில் விசாரணை

சென்னை: விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்து வந்த ஜெய என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கொலையாளிகள் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது. எனவே, சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: