நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: மத்திய அரசின் சிறப்பு பொருளாதார தொகுப்பில் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதார தொகுப்பின் மூலம் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்யம் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் வரவேற்பு, மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்கள் நிதி அமைச்சர் அறிவிப்பார் என பிரதமர் மோடி கூறி இருந்தார்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும், தொழில்களுக்கு புத்துயிர் கொடுக்கவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு பிணையற்ற கடன்கள், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு, இபிஎஃப் என விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு பல்வேறு வரவேற்புகளும், எதிர்ப்புகளும் வந்துள்ளன. அவை;

யோகி ஆதித்யநாத், கெஜ்ரிவால் வரவேற்பு

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.லட்சம் கோடிகடன் அளிக்கப்படும் என அமைச்சர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. மாநிலத்தில் அதிக அளவில் சிறுகுறு தொழில்கள் இருப்பதால் அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

* தொழிலாளர்களுக்கான பி.எப் குறித்து நிதி அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 70லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் அடைவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம், மம்தா எதிர்ப்பு

* நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழைகளுக்கு எதுவுமில்லை என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தினமும் உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்பு ஏமாற்றத்தையே அளிக்கிறது எனவும் கூறியுள்ளார். பசியால் வாடி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்து நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் தொழிலாளார்களுக்கும் சிறிதும் உதவும் வகையில் இந்த நிதி அறிக்கை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும்  வகையில் மத்திய அரசின் அறிவிப்புகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

* மத்திய அரசின் சிறப்பு பொருளாதார தொகுப்பில் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். பொருளாதார தொகுப்பின் மூலம் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்யம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: