மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் ஊரடங்கு தேவை; உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அதிகளவில் மக்கள் நெருக்கடி உள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற இந்திய நகரங்களில், எதிர்பார்த்ததைவிட அதிக காலத்திற்கு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என, உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-லிருந்து 74,281-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,293-லிருந்து 2,415-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455-லிருந்து 24,386-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும், கொரோனா வைரசுக்கான, உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதியும் உள்ள டேவிட் நபரோ கூறியதாவது; இந்தியா அரசு, நாடு முழுக்க பொது ஊரடங்கை அறிவித்துள்ளது மிகவும் தைரியமான முடிவு. அதிகளவில் மக்கள் நெருக்கடி உள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக காலத்திற்கு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

இல்லையென்றால் அதிகமான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன. இது மிகப்பெரிய சவால் என்பதால், இதற்கான சிறப்பு தடுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது. ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என, நிபுணர்கள் நம்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: