களக்காடு: வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் களக்காடு பச்சையாறு அணை தண்ணீர் வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவ லை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன் பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. பச்சையாறு அணை கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது.
அதன்பின் கடந்த 2009, 2014, 2015ம் ஆண்டு மழையின் போது அணை நிரம்பி ததும்பியது. அதன் பின்னர் அணை நிரம்பாமலிருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணைக்கு வந்து சேர்கிறது.