அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக தலா 1000: ரூ.83.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 49 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம்  தேதியோடு முடிவடைகிறது. இருப்பினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது  மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, ஊரடங்கால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட  முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம், பனை மர தொழிலாளர்கள், கைவினை தொழிலாளர் நல வாரியம், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம் ஆகிய 15 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக அறிவித்திருந்தார். 15 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13 லட்சத்து 1277 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும். அதற்காக தமிழக அரசு 130 கோடி ஒதுக்கீடு  செய்தது.

இந்நிலையில், மீண்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில்,15 அமைப்பு  சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் 2-வது முறையாக வழங்கப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.83.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள், பழங்குடியினர் ,  திருநங்கைகள், சினிமாத்துறையினர் என 15 அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: