கொரோனா சமூக பரவலாகி விட்டதா என நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறது ஐசிஎம்ஆர்: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஆய்வு

டெல்லி: சீனாவின் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த வைரஸை எதிர்கொள்வது சற்று சவாலாக உள்ளது. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது மட்டும்தான், இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஒரே வழி என்பதால் உலக நாடுகள் ஊரடங்கை பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  70,756 ஆக உள்ளது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பரவல் வேகமெடுத்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் மூன்றாம் நிலையான சமூக பரவல் நிலையை கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதா? என ஆய்வு செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியா முழுவதும்  69 மாவட்டங்களில் கொரோனா குறித்து மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய  இந்திய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 மாவட்டங்கள்

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொள்கிறது. கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை தொடங்கி விட்டதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: