ஏற்காடு மலைப்பாதையில் பரபரப்பு லாரியில் இருந்து ரூ.5.30 லட்சம் பணத்தை தூக்கி வீசிய குரங்கு

* எடுத்து வைத்த போலீசார் தகவல் தெரிவிக்காதது குறித்து விசாரணை

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் சென்ற லாரியில் இருந்து ₹5.30 லட்சம் பணத்தை குரங்கு தூக்கி சாலையில் வீசியது. அதனை எடுத்து வைத்த போலீசார், ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் (40). இவர் தான் ஓட்டும் லாரியில் நேற்று காலை, ஏற்காட்டிற்கு சர்க்கரை லோடு ஏற்றிச் சென்றார். மேலும், வியாபாரத்தில் வந்த கலெக்சன் தொகை ₹5.30 லட்சம் பணத்தை ஒரு கவரில் சுற்றி எடுத்துச் சென்றார். காலை 6.30 மணிக்கு அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில் செல்லும் இடத்தில் இருக்கும் காவல்துறை சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்தி, கீழே இறங்கி வந்து பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த இடத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்ல நின்றிருந்த ஒரு பெண்ணை லாரியில் ஏற்றிக் கொண்டுச் சென்றார். ஏற்காட்டிற்கு சென்றதும், தான் வேலை பார்க்கும் கடை உரிமையாளரிடம் கொடுக்க, லாரியில் இருந்த பணம் ₹5.30 லட்சத்தை தேடியுள்ளார். அப்போது லாரியில் பணத்தை காணவில்லை. உடனே இதுபற்றி ஏற்காடு போலீசில் முருகன் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், லாரியில் வந்த பெண் பற்றி விசாரித்தனர். மேலும், சோதனைச்சாவடியை லாரி எத்தனை மணிக்கு கடந்தது என்பது பற்றி விசாரித்தனர். அப்போது, சோதனைச்சாவடியில் இருந்த சிறப்பு எஸ்ஐக்கள் முனியப்பன், பத்மநாபன், ஏட்டு மாதேஷ் ஆகியோர் காலை 6.30 மணிக்கு அந்த லாரியும், அதனுடன் ஒரு காரும் ஒன்றாக சென்றது. அப்போது, ஒரு குரங்கு ஒரு பார்சலை தூக்கி சாலையில் வீசியது. அதனை எடுத்து பார்த்தபோது, உள்ளே ₹5.30 லட்சம் பணம் இருந்தது. அது லாரியில் இருந்தவர் கொண்டு சென்றதா?, காரில் சென்றவர்கள் கொண்டு சென்றதா? எனத்தெரியவில்லை. அதனால், வந்து கேட்டால் கொடுத்து விடலாம் என பணத்தை வைத்திருந்தோம் என சிறப்பு எஸ்ஐக்கள் கூறினர். இதையடுத்து லாரியில் இருந்து குரங்கு தூக்கி வீசிய பணம் ₹5.30 லட்சத்தையும் மீட்டனர். அதனை பறிகொடுத்த டிரைவர் முருகனிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பணத்தை எடுத்தது பற்றி ஏன் உடனே தகவல் தெரிவிக்கவில்லை என உயர் போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுதொடர்பாக சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் ஏட்டுவிடம் ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: