கொரோனா சிறப்பு ஊதியம்; பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என புகார்: மதுரை, திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மதுரை: சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று வளர்ந்த நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அச்சுறுத்தி வருகிறது. மருந்து ஏதும் கண்டுபிடிக்காமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உலகநாடுகள் திணறி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டவர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்து மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக கூட்றவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டின் அருகிலுள்ள 36,37 வார்டு அலுவலகம் உட்பட 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், கொரோனா பேரிடர் தொகையாக ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் ஈடுபட்டுள்ளனர்.

இதனைபோல், கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய கோரியும், அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் தூய்மை பணியாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: