செய்யாறு அருகே 6வது நாளாக பரபரப்பு: 20 ஷூ கம்பெனி பஸ்கள் சிறைபிடிப்பு

செய்யாறு:செய்யாறு அருகே இன்று காலை 20 கம்பெனி பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் சிப்காட் ஷூ கம்பெனி உள்ளது. இங்கு சுமார் 28 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். கொராேனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்களில் ஓரளவு தளர்வு காரணமாக கடந்த 6ம்தேதி முதல் ஷூ கம்பெனி இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இங்கு வேலைக்கு சென்று திரும்புபவர்களால் கிராமங்களில் கொரோனா பரவல் ஏற்படும் என்று கிராம மக்கள் அச்சமடைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கம்பெனிக்கு செல்லும் பஸ்களை தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 6வது நாளான இன்றும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஆரணியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த 6 பஸ்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பஸ்களை செய்யாறு-ஆரணி சாலையில் மாமண்டூர், நேத்தப்பாக்கம், இருங்கூர், தட்டச்சேரி ஆகிய இடங்களில் கிராமமக்கள் சிறைபிடித்தனர். சுமார் 1  மணி நேரத்திற்கு பின்னர் ஆரணி, கலவை, வாழப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசி பஸ்களை விடுவித்தனர். அதேபோல் செய்யாறு, ஆரணி. கொர்க்கை சாலை செய்யாற்றை வென்றான் பகுதியில் ஷூ கம்பெனி பஸ்கள் வருவதை தடுக்க அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரிய கற்களை பொதுமக்கள் அடுக்கி வைத்தனர்.

மரக்கிளைகளால் தடுப்பு ஏற்படுத்தினர். தூசி பகுதியில் பணிக்கு செல்ல காத்திருந்தவர்கள் பஸ்கள் வராததால் வீட்டிற்கு திரும்பினர். இதற்கிடையில் 5250 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தெர்மல் கருவிமூலம் பரிசோதனை செய்யப்பட்டு பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று மொத்தம் 50 சதவீதத்திற்கு மேல் தொழிலாளர்கள் பணிக்கு வந்ததாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories: