சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது: ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயன்படுத்த முயன்றதால் IRCTC சர்வர் பாதிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கால் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதுதவிர, வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் ரயில் சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கோவான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும். பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளிட்ட எந்த டிக்கெட்டையும் கவுன்டர்களில் வாங்க முடியாது.

முன்பதிவு செய்த செல்லத்தக்க டிக்கெட் வைத்துள்ள பயணிகள் மட்டுமே உடல் வெப்பநிலை சோதனைக்கு பின்னர் ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 15 முக்கிய நகரங்களுக்கு நாளை முதல் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் தொடங்கிய சிறிது சிறிது நேரத்திலேயே IRCTC இணையதளம் முடங்கியது. இது தொழில்நுட்ப ரீதியாக கோளாறு ஏற்பட்டதா அல்லது ஓரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய பயன்படுத்தியதால் வந்த கோளாறா என்ன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இருப்பினும் IRCTC இணையதளம் மூலமாக மட்டுமே டடிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி கோளாறு சரிசெய்யப்பட்டு இதற்கான முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக இது தாமதம் ஆனாலும் கூட பயணம் செய்ய விரும்புபவர்கள் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.

Related Stories: