முகாம்களில் தங்க வையுங்கள்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்...அனைத்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி  தவிக்கின்றனர். தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மே 1ம் தேதி தொடங்கி கடந்த  நேற்று வரை 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. சுமார் 90 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடந்த 5 நாட்களில் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெளிமாநில தொழிலாளிகள் சிலர் நடந்து சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் தூக்கம் காரணாமாக மகாராஷ்டிரா  மாநிலத்தில் அவுரங்காபாத் கர்மத் அருகே தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். காலை 6.30 மணியளவில் அந்த தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிய கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே 17 பேர்  உயிரிழந்தனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளது. அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த  ஊர்களுக்கு சாலை அல்லது ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம். ஒருவேளை நடந்து சென்றால் செல்பவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும். பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: