முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்குக்கு நேற்று இரவு அவரது வீட்டில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் இரவு 8.45 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள இருதய சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை, கார்டியாலஜி பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மன்மோகன் சிங் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 87 வயதாகும் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2009ம் ஆண்டு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், இந்திய அரசியலில் மிக மூத்த தலைவராகவும் உள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Related Stories: