டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வங்கி மேலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளிலும், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.  இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை கொளத்தூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், தேர்வு முறைகேட்டில் கைதான முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாருக்கு, தன்னுடைய உறவினரின் மகனை அறிமுகம் செய்து வைத்ததாகவும், வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். குரூப் 2 தேர்வுக்கு ரூ.9 லட்சம் என்றும் குரூப் 4 தேர்வுக்கு ரூ.7 லட்சம் என்றும் வசூலித்து ஜெயக்குமாருக்கு வழங்கியுள்ளார் எனக்கூறி ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது’ என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: