சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்தை சேர்ந்த 2,345 பயணிகள் 2 சிறப்பு ரயில்களில் புறப்பட்டனர்

சென்னை: சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளிமாநிலத்தை சேர்ந்த 2,345 பயணிகள் 2 சிறப்பு ரயில்களில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

 கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அவசர, அவசரமாக மத்திய அரசு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் 3வது கட்டமாக மே 17ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள். அவர்கள் மாநகராட்சி பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்  மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.  

நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து ஜெகநாத்பூர்க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இந்த சிறப்பு ரயில்களில் ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் 2 சிறப்பு ரயில்கள் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இரவு 8 மணிக்கு மணிப்பூருக்கு 1148 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆந்திரா, மகாராஷ்டிரா, ஓடிசா, மேற்குவங்காளம், அசாம் வழியாக மணிப்பூருக்கு புறப்பட்டது. இந்த ரயில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜிரிபம் ரயில்நிலையத்திற்கு 13ம் தேதி சென்றடையும். இரண்டாவது சிறப்பு ரயில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 1,197 பேரை ஏற்றிக் கொண்டு இரவு 10 மணிக்கு புறப்பட்டது. குண்டூர், விஜயவாடா, மராட்டியம், சத்தீஷ்கர் வழியாக ஆந்திர மாநிலம் காகுளத்துக்கு 12ம் தேதி சென்றடைகிறது.

 

ரயில்நிலையத்துத்து வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை செய்தனர். ரயில்களில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். நான்கு பேர் அமரக்கூடிய இருக்கைகளில் இரண்டு பேரை சமூக இடைவெளியுடன் உட்கார வைத்தனர். ரயில்கள் புறப்பட்டதும் வெளிமாநில பயணிகள் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: