பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு: இன்று இரவு முதல் செயல்படுகிறது

சென்னை:கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அங்கு சென்று வந்த காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனால் தமிழகத்தின் கொரோனா தொற்று பரவல் மையம் என்று சொல்லப்படும் அளவுக்கு கோயம்பேடு காய்கறி சந்தை மாறி விட்டது.  இதை தொடர்ந்து கடந்த 5ம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டை தமிழக அரசு அதிரடியாக மூட உத்தரவிட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பூந்தமல்லி அருகேயுள்ள திருமழிசையில் 100 ஏக்கர் நிலத்தை சமனபடுத்தி, அங்கு தற்காலிகமாக மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று கடந்த 7ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் நாளை முதல் திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் 200 கடைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு கடைகளுக்கு இடையே 20 அடி இடைவெளி அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கடைக்கும் தனி மின் இணைப்பு மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் போலீசார் பாதுகாப்பு மையம், 2 சுகாதாரத்துறை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வவம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா.பாண்டியராஜன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், தொல்லியல் துறை உதவி ஆணையர் உதயசந்திரன், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிகள் குறித்தும், வியாபாரிகளுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதை தொடர்ந்து, இன்றிரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த காய்கறி மையம் தொடர்ந்து நாளை அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விற்பனைக்கு காய்கறிகளை வாங்க வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது. மேலும், மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள் கிருமி நாசினி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: