மாதவரம் தோட்டக்கலை பூங்கா வளாகத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்: அதிகாரிகள் ஏற்பாடு

திருவொற்றியூர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்து சென்ற வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, அங்கு செயல்பட்ட கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டது. அதன்படி பூ மற்றும் பழம் மார்க்கெட்டை மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள ஆந்திரா பேருந்து நிலையத்தில் மாற்றப்பட்டது.  காய்கறி மார்க்கெட்டை திருமழிசை பகுதிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு நாளை முதல் (இன்று) செயல்படும் என்று தெரிகிறது. இதற்கும் கோயம்பேடு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திரா பேருந்து நிலையத்தில் பூ, பழங்கள் மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பழங்கள் மட்டும் படிப்படியாக சுமார் 150 கடைகள் வரை தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால் பூ வியாபாரம் முழுமையாக தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மாதவரம் பால் பண்ணையில் உள்ள தோட்டக்கலை பூங்கா வாகன நிறுத்த மைய வளாகத்தில்  தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்க தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தோட்டக்கலை மூலம் நேரடியாக கொள்முதல் செய்து  இங்கு கொண்டுவரப்பட்டு காய்கறிகளை மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்படி, நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டிருப்பதால் காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலை ஏற்றத்தை தடுக்கவும் தற்காலிகமாக இங்கு மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: