கொரோனாவால் வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இந்தியாவிற்கு வராது: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை

புதுடெல்லி: கொரோனா பரவலைப் பொருத்தவரை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வராது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342-லிருந்து 59,662-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,886-லிருந்து 1,981-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,540-லிருந்து 17,847-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொளி காட்சி வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது; நாடு இனிமேல் தான் மோசமான கொரோனா பரவலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் வளர்ந்த நாடுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற நிலைமை இந்தியாவுக்கு வராது. இந்தியாவில் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாகவும், குணமடைவோர் விகிதம் 29.9 சதவீதமாகவும் இருக்கிறது. இவை நல்ல அறிகுறிகளாக இருக்கின்றன.

தொற்று இரட்டிப்பாவது கடந்த 3 நாட்களாக குறைந்துள்ளது. 0.38 சதவீத நோயாளிகள் மட்டுமே வெண்டிலேட்டரில் உள்ளனர். பிரத்யேகமாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 843 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 1,65,991 படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் 1,991 அர்ப்பணிப்பு கொரோனா சுகாதார நிலையங்கள் உள்ளன. அவை 1,35,643 படுக்கைகளைக் கொண்டுள்ளன. இந்த படுக்கைகளில் தனிமை மற்றும் ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளன. சுகாதார அமைச்சகம் தொடர்ந்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தினசரி அடிப்படையில் தரவுகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories: