தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக்குழு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சீரமைக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3 கட்டமாக 46வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தொடங்கியது முதல் அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் சில ஊரடங்கு உத்தரவுகளை வெளியிட்டது.

அதில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கடைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மே 11ம் தேதி முதல் டீ கடைகள், பெட்ரோல் பங்குகள் தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உயர்மட்ட குழுவை உருவாகியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெஃப் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும், நிலைமையை சீராக்க தற்போதிருக்கும் வாய்ப்புகள் குறித்தும் இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

Related Stories: