அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர், திருத்தணியில் 40டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. முற்பகல் 11: 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை முற்பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் காணப்படுகிறது. மாலை நேரங்களில் வானம் தெளிவாக காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் தென்காசியில் 4 சென்டி மீட்டர் மழையும்,ஆயிக்குடியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: