தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலையா?: சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசிடம் தொழில் துறை அமைப்புகள் கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பணி நேரத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கை கடந்த மார்ச் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு முடிய இருந்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஊரடங்கு  19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

 மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தொற்று தீவிரமாகவே இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென சில மாநில முதல்வர்கள் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.  அதே சமயம், 40 நாள் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்றும் முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு கடந்த 3-ம் தேதி முடிந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் நோய் தொற்று  அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக தனியார் மற்றும் அரசு அலுவலங்கள்  33 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 12 தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் காணொளி மூலம் நேற்று கலந்துரையாடினார்.  ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு தொழிற்சாலைகளை இயக்குவது, புதிய  வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. லாக் டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு தொழிலாளர் சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று  கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொழிலாளா்களுக்கு தரப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம், போனஸ் தொகை, இதர நிலுவைத்தொகை வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு

வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனர். 33 சதவீதத்துக்குப் பதிலாக 50 சதவீத ஊழியா்களுடன் தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும்  அவா்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தொழிலாளா் சட்டத்தில் திருத்தம் செய்யப்படாமலேயே வேலை நேரத்தை 12 மணி  நேரமாக நீட்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: