போதை ஆசாமிகள் தாக்கியதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

செங்கல்பட்டு: போதை ஆசாமிகள் தாக்கியதை கண்டித்து செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மை பணியாளர்களாக 130 பேர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, தூய்மை பணியாளர்கள் 4 பேர், குப்பைகளை வண்டியில் ஏற்றி கொண்டு செங்கல்பட்டு ரேடியல் மலையில், கொட்டுவதற்காக சென்றனர். அப்போது அங்கு, போதையில் இருந்த 3 பேர், தூய்மை பணியாளர்கள் 4 பேரையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்கள், குப்பை வண்டியை அங்கேயே போட்டு விட்டு தப்பி னர். இச்சம்பவம் சக தொழிலாளர்களுக்கு தெரிந்தது.

இந்நிலையில், நேற்று காலையில் 130 தூய்மை பணியாளர்களும், நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு, தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தாக்குதல் நடத்திய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நகராட்சி ஆணையர் டிட்டோ, எஸ்பி கண்ணன், செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: