2வது நாளாக டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: சமூக இடைவெளியை பின்பற்றாத குடிமகன்கள்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் இரண்டாது நாளாக குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் சமூக இடைவெளியை குடிமகன்கள் பின்பற்றாததால் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  டாஸ்மாக் கடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும் 5,300 கடைகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டது. முதல்நாளான நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலை மோதியது. டாஸ்மாக் கடைகளில் பல கி.மீ தூரம் வரிசையில் நின்று மது வகைகளை குடிமகன்கள் வாங்கி சென்றனர்.  இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.

பலரும் போட்டிபோட்டு மதுவகைகளை அள்ளிச் சென்றனர். முதல்நாள் போன்று இரண்டாவது நாளில் பெரும்பாலான கடைகளில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றப்படவில்லை. பல கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பார்கள் இல்லாததால் கடைகள் முன்பே குடித்து கும்மாளம் போட்டனர். முதல்நாளை காட்டிலும் இரண்டாவது நாள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இதற்கிடையே தமிழகத்தில் முதல்நாளான நேற்று முன்தினம் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ரூ.10.16 கோடி (காஞ்சிபுரம் 6.75 கோடி, திருவள்ளூர் 3.31 கோடி) திருச்சி மண்டலத்தில் ரூ.45.67 கோடி, மதுரையில் ரூ.46.78 கோடி, சேலத்தில் ரூ.41.56 கோடி, கோவையில் ரூ.28.42 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, பீர் வகைகள் 45,061 பெட்டிகள், மதுவகைகள் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 பெட்டிகள் விற்பனையாகியுள்ளது. 2வது நாளாக நேற்று, ரூ.135 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த விவரம் இன்று வெளியிடப்படும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: