சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம், அரசு வேலை: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: கொரோனா பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ₹50 லட்சமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சேட்டு, ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதால், கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமை காவலர் சேட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த தலைமை காவலர் சேட்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: