திருவிக நகர் மண்டலத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சிறப்பு வார்டாக மாற்றும் பணி தீவிரம்: 1250 படுக்கை வசதியுடன் அமைகிறது

பெரம்பூர்: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருவிக நகர் மண்டலத்தில் நேற்று முன்தினம் வரை 357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி உள்ளனர்.

திருவிக நகர் மண்டல சிறப்பு அதிகாரி அருண் தம்பிராஜ் ஐஏஎஸ் மேற்பார்வையில் செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன் உள்ளிட்ட குழுவினர்   கடந்த 3 நாட்களாக இந்த பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஏ, பி, சி, டி என  என 4 பிளாக்குகளுக்கும்   சேர்த்து 1,728 வீடுகள் உள்ளன. இங்கு, 1250 படுக்கை வசதி வசதி செய்யப்படுகிறது. 2 நாட்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னையில் கொரோனாவால்   பாதித்தவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, அரசு பன்னோக்கு மருத்துமனை மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து வந்த நிலையில், நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக மேற்கண்ட மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், தற்போது குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சிறப்பு வார்டாக அதிகாரிகள் மாற்றி வருகின்றனர்.

சென்னையில் குறிப்பாக திருவிக நகர் மண்டலத்தில் நோய் தொற்று அதிகம் உள்ளதால், இந்த மண்டலத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தற்போது சிறப்பு வார்டு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், புழல் அடுத்த சூரப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. புழல் சிதம்பரம் நகர் அம்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெண்கள் செவிலியர் கல்லூரியும் சிறப்பு வார்டாக மாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: