கொரோனாவை வியாபாரிகள் பரப்பவில்லை: இடம் மாற்ற அவகாசம் தராததால் 5 நாள் காய்கறி விற்பனை நிறுத்தம்: வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பேட்டி

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற அரசு அவகாசம் தராதது ஏன்? என்று வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடியதால் காய்கறி விற்பனை 5 நாட்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் பேட்டியில் கூறியதாவது:  கொரோனா பரவல் வேகமாக இருப்பதாக கூறி நேற்று திடீரென்று என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக மூடிவிட்டனர்.

அதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கலாம். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டன் சரக்குகள் வருகின்றன. சென்னை முழுவதும் மக்களுககு சப்ளை செய்யப்படுகிறது. இதனை உடனடியாக மாற்ற சொன்னால் முடியாது. நேற்று ஒரு நாள் அவகாசம் கொடுத்தனர். சரக்குகள் அனைத்தையும் மாற்றியுள்ளோம். திருமழிசை செல்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். போவதற்கு அனைத்து வியாபாரிகளும் தயாராக இருக்கிறோம். 27 சங்கங்களும் தயாராக உள்ளன. ஆனால், அங்கு தொழிலாளர்கள் தங்குவது, கழிப்பறை, பாதுகாப்பு உள்ளிட்டறற  எத்தகைய வசதிகள் செய்துள்ளனர் என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வசதிகளை செய்து தர 5 நாட்கள் வியாபாரத்தை நிறுத்தி கொள்கிறோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

சந்தைக்கு விடுமுறை விட வேண்டும் என்று  எவ்வளவோம் வலியுறுத்தினோம். ஆனால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் காய்கறி என்பதால் நடத்த வேண்டும் என்று கூறியதால் தான் நாங்கள் நடத்தி வந்தோம். திருமழிசை செல்வதற்கு வியாபாரிகளுக்கு  எந்த கருத்து வேறுபாடும்  இல்லை. 7 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டியை அழைத்துச் சென்று ஆய்வு செய்தால் நாங்கள் அங்கு சென்று வியாபாரம் செய்ய தயாராக உள்ளோம். கோயம்பேடு வியாபாரிகள் மக்களுக்காக தான் வியாபாரம் செய்கிறோமே தவிர, சுயநலத்துக்காக வரவில்லை.  

காய்கறி வியாபாரிகள் வேண்டும் என்று நோயை பரப்பவில்லை. வரும் 10-ம் தேதிக்கு பிறகு தான்  திருமழிசையில் சரக்குகளை இறக்க முடிவு செய்துள்ளோம். 5 நாட்களில் அரசு  எங்களை அழைத்து சென்று அந்த இடங்களை ஆய்வு செய்து எங்களுக்கான வசதி  வாய்ப்புகளை உறுதிப்படுத்தினால் தவிர இந்த வியாபாரம் செய்ய முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: