ஜிஎஸ்டி வசூல் தேசிய சராசரியை விட சரிந்தது பொருளாதார வீழ்ச்சியில் தமிழகம்

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை காட்டும் வகையில், இந்த மாநிலத்தின் கடந்த நிதியாண்டு ஜிஎஸ்டி வசூல் தேசிய சராசரியை விட குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி ஆகியவை அடங்கியுள்ளன. கடந்த 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை, மாநிலம் வாரியாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் கடந்த நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி 74,430.43 கோடி வசூலாகியுள்ளது. 2018-19 நிதியாண்டில் இது 70,562.21 கோடி. அதாவது, வெறும் 5.48 சதவீதம் மட்டுமே வசூல் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக 7.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த சராசரியை விடவும் தமிழகத்தில் வசூல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் தொழில் முடக்கத்தை வெளிப்படுத்தும் சான்றாகவே இது அமைந்துள்ளது. உற்பத்தி துறையில் ஏற்பட்ட மந்த நிலைதான் இதற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.இது குறித்து டெல்லியை சேர்ந்த பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி  கூறுகையில், ‘உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள தமிழகத்தில், கடந்த ஆண்டை  விட நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் குறைய வாய்ப்புகள் உள்ளது என்றார்.ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க மருந்து துறை, விவசாயம் மற்றும் ஐடி துறைகள் கைகொடுத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் நிலைமை வேறாக உள்ளது.

‘‘ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மையமாக திகழும் தமிழகம், பொருளாதார மந்தநிலை துவங்கியதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி குறைவாக உள்ளது. அதோடு, பல்வேறு பொருட்களுக்கான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி அமைத்தது. இதுமட்டுமின்றி, சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை. ஜிஎஸ்டி கணக்கு தாக்கலில் உள்ள சில சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படவில்லை. இதுவும் வசூல் குறைய ஒரு காரணமாக அமைந்து விட்டது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையை பார்க்கும்போது, தமிழகம் இந்த வளர்ச்சியை எட்ட நீண்டகாலம் ஆகும் என்றே கூறலாம்’’ என மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வசூல் (கோடி ரூபாயில்)

மாநிலம்    2018-19    2019-20    வசூல் வளர்ச்சி

டெல்லி    39,859.1    44,161.76    10.79%

மகாராஷ்டிரா    1,70,291    1,85,918    9.17%

மேற்கு வங்கம்    39,780    43,386    9.08%

குஜராத்    73,441    78,923    7.46%

உத்தரபிரதேசம்    61,289    65,281    6.51%

கர்நாடகா    78,762    83,408    5.89%

தமிழகம்    70,562    74,430    5.48%

Related Stories: