பாரத் நெட் திட்ட ஒப்பந்த புள்ளிகளுக்கு மத்திய அரசு தடைவிதிக்கவில்லை: அமைச்சர் உதயகுமார் விளக்கம்

சென்னை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரத் நெட்  திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம்  இணைக்கும் உட்கட்டமைப்பு திட்டமாகும்.  இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும்.  அரசின் அனைத்து துறைகளின் சேவைகளை மக்களுக்கு நேரடியாக ஒளிவு மறைவின்றி சென்று சேர்க்கும் தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  பாரத் நெட் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள இணையதள வலையங்களான தேசிய அறிவுத்திறன் வலையமைப்பு, ‘தமிழ்நாடு மாநில பெரும் பரப்பு வலையமைப்பு  மற்றும் காவல்துறையின் இணையதளம் ஆகிய அனைத்து வலை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கிராமப்புற மக்களுக்கு இணையதள சேவைகளை வழங்கி சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களை மேம்படுத்த இத்திட்டம் இணைப்பு பாலமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் கடந்த 2019 டிசம்பர் 5ம் தேதியன்று வலைதளம் மூலமாக ஒப்பந்தப்புள்ளி கோரியது.  அதன் பின்பு ஒப்பந்தப் புள்ளிக்கான முன்னோடி கூட்டம் கடந்த பிப்ரவரி 21ல் நடத்தப்பட்டது.  உத்தேச ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது.  அந்த சந்தேகங்களை ஆய்வு செய்து, பிழை திருத்த பட்டியல்  கடந்த ஏப்ரல் 15ம் தேதி அரசு வலை தளம் மூலம் வெளியிடப்பட்டது. இதனிடையில், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை இத்திட்டத்தை 2021 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது.  இந்நிலையில், மேற்கண்ட ஒப்பந்தப்புள்ளியில் மேக் இன் இந்தியா கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள் போட்டியாளர்களின் வாய்ப்புகளை குறைக்கும் வகையில் சில வரையரைகளை திருத்தங்கள் செய்திருப்பதாக சில அமைப்புகள் தவறான புரிதலோடு, முழுமையாக ஆராயாமல் புகார் அளித்ததன் பேரில், மத்திய அரசின் தொழில் மற்றும்  உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் அறிக்கை கோரியுள்ளது.

50 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்ற மத்திய அரசின் வரைமுறையை மீறி உள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளி வரையறைகளில், உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் 50 சதவீதத்திற்கு மேலாக பங்கேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்த ஒப்பந்தப் புள்ளியில், உள்நாட்டு தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது.  இது தொடர்பாக தனது விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: