மதுரையில் 4 பட்டர்கள் நடத்திய மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: இணையத்தில் பக்தர்கள் தரிசனம்

மதுரை:  மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இது கோயில் இணையம் மூலம் ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டு சித்திரை திருவிழா தடை செய்யப்பட்டது. எனவே, திருக்கல்யாணம் மட்டும் நேற்று கோயிலில் நடந்தது. திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில், விக்னேஸ்வர பூஜையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கின.

சுந்தரேஸ்வரர் வெண்பட்டிலும், மீனாட்சியம்மன் பச்சை பட்டிலும், பிரியாவிடை கிளிப்பச்சை  பட்டிலும் ஜொலித்தனர். அம்மன் பிரதிநிதி ராஜா பட்டருக்கும், சுவாமியின்  பிரதிநிதியான செந்தில் பட்டருக்கும் காப்பு கட்டப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் 4 பட்டர்கள் மட்டுமே பங்கேற்றனர். காலை 9.20 மணிக்கு அம்மனுக்கு மங்கல நாண் சூட்டப்பட்டது. பின்னர் விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு, பொரி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மீனாட்சியம்மன் கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே திருக்கல்யாண திருவிழாவை கண்டு, தரிசனம் செய்தனர்.

மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டிய பின்னர், வழக்கமாக பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர். இந்தாண்டு பெண்கள், திருக்கல்யாணத்தை நேரடியாக காண முடியாததால், தங்களது வீடுகளில் இருந்தவாறே மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர்.

திருமணத்துக்கு வராத திருப்பரங்குன்றம் முருகன்

ஆண்டுதோறும் நடக்கும் திருக்கல்யாண நிகழ்வை காண திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து முருகன் - தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை, அதிகாலை 5 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து மண மேடையில் அமர வைப்பது வழக்கம். ஆனால், இம்முறை மேடையில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை மட்டுமே  இருந்தனர்.

இணையதளம் முடங்கியது

திருக்கல்யாண நிகழ்வை கோயில் இணையதளத்தில் ஒரே நேரத்தில், ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டதால் இணையதளம் முடங்கியது. இதனால் பலர் பார்க்க முடியாமல் தவித்தனர். திருக்கல்யாணம் நடப்பதை அறிந்து பலர் மாசி வீதிகளில் வலம் வந்தனர். இவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் கோபுரங்களை தரிசித்துச் சென்றனர்.

Related Stories: