கொரோனா வைரசை செயலிழக்க செய்யும் ரசாயன நானோ துகள் கொண்ட நவீன கவச உடை 300க்கு தயாரிப்பு: ஐஐடி மாணவர்கள் சாதனை

சென்னை: கொரோனா வைரசை தடுக்கும் கவச உடை தயாரிக்க ஏதுவாக ரசாயன நானோ துகள்களையும்,  இதை துணியில் பூசுவதற்கான இயந்திரம் ஆகிய இரண்டையும் சென்னை ஐஐடியால் ஊக்குவிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்படும் கவசங்கள் கொரோனா வைரசை செயலிழக்கச் செய்யும் என்று சென்னை ஐஐடியின் இங்க்பேஷன் செல் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் உள்ள இங்க்பேஷன் செல் பிரிவு இயங்கி வருகிறது. ஐஐடியில் படித்து முடித்துவிட்டு தொழில் முனைவோராக மாறுவோருக்கு இந்த இங்க்பேஷன் செல் பல்வேறு வகைகளில் உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மேற்கண்ட பிரிவால் ஊக்குவிக்கப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்று தற்போது நவீன முறையில் வைரஸ் தடுப்பு கவசங்கள் தயாரிக்கும் துணியை தயாரித்துள்ளது.

இதற்கு சென்னை ஐஐடி உறுதுணையாக இருந்துள்ளது. இந்த தொழில் நிறுவனம் தற்போது கொரோனா போன்ற வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் ரசாயன நானோ துகள்களை  தயாரித்துள்ளது. வழக்கமாக பாதுகாப்பு கவச உடை, முகக் கவசம் அதற்கான துணியில் தயாரிக்கப்படும். ஆனால் ரசாயன நானோ துகள்களை பூசிய துணியில்  தயாராகும் கவசங்கள் கொரோனா வைரசை செயலிழக்கச் செய்துவிடும். ஜவுளித் தொழிற்சாலைகளில் நெய்யப்படும் துணிகளில் இந்த ரசாயனத்தை பூசுவதற்கு வசதியாக நவீன இயந்திரம் ஒன்றையும் இந்த தொழில் நிறுவனம் வடிவமைத்துள்ளது.  இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் தற்போது கொரோனா தடுப்புக்கு பெரிதும் உதவும்.

இந்த நானோ ரசாயன துகள்கள் பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்படும் கவசங்களை 60 முறை தண்ணீரில் துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகும் ஜவுளித்துறையினர் இதை மீண்டும் மறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியும். இந்த ரசாயன பூச்சு துணியை கொண்டு என் 95  கவசம், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் கவசங்கள், பிபிஇ மற்றும் உணவை பார்சல் செய்யும் பைகள் இன்னும் பிறவற்றை தயாரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் கொரோனா வைரஸ்கள் செயலிழந்து விடும்.

மேலும் நவீன இயந்திரத்தின் மூலம் மேற்கண்ட நானோ ரசாயனத் துகள்களை 100 மீட்டர்கள் கொண்ட துணியில் சில நிமிடங்களில் பூசி முடித்துவிடலாம்.

இது குறித்து சென்னை ஐஐடியின் இங்க்பேஷன் செல் பிரிவின் நிர்வாக அதிகாரி டாக்டர் தாமஸ்வதி கோஷ் கூறியதாவது: நவீன நானோ ரசாயன துகள்கள் துணியில் பூசப்பட்ட பிறகு, அந்த துணியில் இருந்து என் 95 கவசங்கள், இங்க்பேஷன் பெட்டிகள், பரிசோதனைக்கான வெண்டிலேட்டர்கள், ஆகியவற்றை தயாரித்துக் கொள்ள முடியும்.

 இவை எளிதாவும் விரைவாகவும் எடுத்துச்செல்ல முடியும். இதையடுத்து சென்னை ஐஐடியின் இங்க்பேஷன் செல் பிரிவு தொடர்ந்து அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்பவும், சவாலான  நேரங்களிலும் உறுதுணையாக இருக்கும்.

இதையடுத்து, இது போன்ற கவச உடைகள் தயாரிக்கும் இயந்திரங்கள் பல்வேறு ஜவுளி தொழிற்சாலைகளில் நிறுவப்படும். அதில் ரசாயன நானோ துகள்கள் பூசப்படும் துணிகள் தயாரிக்கப்படும். இந்த வகை துகள்கள் பூசப்பட்ட துணிகள் மே முதல் வாரத்தில் பரிசோதனை செய்யப்படும். இந்த வகை கவச உடைகள் தயாரிப்பில் கான்சுமெக்ஸ் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  இதை விரைவில் அந்த நிறுவனம் வெளியிட உள்ளது. அதன்படி 5 அடுக்குகள் கொண்ட என்95 கவசங்கள்₹300 விலையில் கிடைக்கும்.

Related Stories: