சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெறுமா?; அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது....வெளியே செல்வதை தவிர்க்க வானிலை மையம் அறிவுரை

சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும். கேரளாவில் துவங்கும் இந்த மழை, ஜூன், ஜூலை மாதங்களில், கேரளா, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, ஜம்மு - காஷ்மீர் வரை பரவும்.பருவமழை துவங்க, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் இன்று தொடங்கிறது. வரும் 28ம் தேதி வரை சுமார் 25 நாட்கள் வாட்டி வதைக்கப்போகிறது. இதற்கு முன்னோட்டமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அக்னி நட்சத்திர காலங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படும். அதனால் சூரியனின் கதிர்கள் விழும்போது அதிக வெப்பமாக தெரியும். இப்படி பூமியானது சூரியனை ஒரு புள்ளியில் இருந்து சுற்றத்தொடங்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் காலம் என வழக்கத்தில் கூறப்படுகிறது. இக்காலத்தில் வெயிலின் பாதிப்பும் அதிகம் இருக்கும். கடும் வறட்சி நிலவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய காலம்.

அக்னி வெளியில் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்று வீசும்.ஆனாலும், வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத, தமிழக உள் மாவட்டங்களில், சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் தாக்கம் இருக்கும். எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபிஷேகம் நடைபெறுமா?

அக்னி நட்சத்திரத்தையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் தாராபிஷேகம் தொடங்கும். தினமும் உச்சிகால பூஜை தொடங்கி, சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு தாராபிஷேகம் நடைபெறும். அப்போது, ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை, பன்னீரில் கலந்து இறைவன் மீது துளித்துளியாக விழும்படி தாராபிஷேகம் செய்யப்படும். எனவே, தாராபிஷேகம் நடைபெறும் காலங்களில் இறைவனுக்கு கவசம் அணிவிக்கும் வழக்கம் இல்லை. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சிவன் கோயில்களில் தாராபிஷேகம் நடைபெறுமா என்ற சந்தேசகம் எழுந்துள்ளது.

Related Stories: