காய்கறி வியாபாரிக்கு கொரோனா திருவான்மியூர் மார்க்கெட்டுக்கு சீல்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்த 63 வயது வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் சென்று வந்த இடங்கள், இவருடன் தொடர்பில் இருந்த நபர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர். பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருவான்மியூர் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  எனவே, இவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில், நேற்று அந்த பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர் ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கொட்டிவாக்கத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கிருந்தவர்கள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பரிசோதனை செய்ய முடியாது என கூறி, அவரை திருப்பி அனுப்பினர். இந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி காலையில் காய்கறி மார்க்கெட்டிலும், மற்ற நேரங்களில் திருவான்மியூரில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் துறை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலும் செய்து வருகின்றனர். எனவே, இவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: