போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ரம்ஜான் பண்டிகை முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: பண்டிகை கால முன்பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், அக்கோட்டத்திலுள்ள அனைத்து பொதுமேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊதிய ஒப்பந்த ஆணையின்படி வருகின்ற 2020ம் ஆண்டிற்கான ரம்ஜான் பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்கப்படும்.  எனவே விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மண்டலங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமிருந்து ரம்ஜான் முன்பணம் பெற விருப்பம் உள்ள நிரந்தர பணியாளர்களிடமிருந்தும், மேலும் இவ்வாண்டில் புதியதாக பணி நிரந்தரம் பெற்றவர்கள் மற்றும் புதியதாக ரம்ஜான் முன்பணம் பெற விரும்பும் தகுதியுடைய பணியாளர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வரும் 15ம்  அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சம்பந்தப்பட்ட மண்டல பிடித்தம் மற்றும் செலுத்துதல் பிரிவில் பெறப்படும்படி விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஓராண்டு பணி முழுமையடையாத பயிற்சியாளர் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு இரண்டு நிரந்தர பணியாளர்கள் பொறுப்பு ஏற்பு அளித்தல் வேண்டும். நிரந்தர பணியாளர்கள் இரண்டு பயிற்சியாளர்களுக்கு மேல் பொறுப்பேற்பு அளிக்கக்கூடாது. பொறுப்பேற்பு இன்றி வரும் பயிற்சியாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தொழில் பழகுநர்  மற்றும் தற்செயல் பணியாளர்கள்  ஆகியோர் மேற்படி முன்பணம் பெற தகுதியற்றவர்கள். மேலும் தற்காலிக பணி நீக்கம் மற்றும் தொடர்ந்து பணிக்கு வராதவர் முன்பணம் பெற தகுதியற்றவர்கள். மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் , பொங்கல் பண்டிகை முன் பணம் பெற்றவர்கள் ரம்ஜான் பண்டிகை முன்பணம் பெற தகுதியற்றவர்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களில் இருந்தும், அதன் கீழ் பணியாற்றும் பொதுமேலாளர்களுக்கும் சர்குலர் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: