மருத்துவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி; நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் மலர்தூவி மரியாதை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை ஆகியோர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கொரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர்.

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் ராணுவம் உறுதியாக நிற்கிறது” என்று தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளை இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்களை தூவும். மேலும், கொரோனா போர் வீரர்களுக்கு நன்றி செலுத்த கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்பு நடத்துவதோடு, கப்பல்கள் வண்ண விளக்கொளியில் மிளிரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் உள்ள மருத்துவமனை முன்பு ராணுவம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்படும் என்று பிபின் ராவத் கூறினார்.

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது இந்திய விமானப்படை போர் மலர்களை தூவி கௌரவப்படுத்தியது. மேலும், மருத்துவமனையின் முன்பக்கத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. முதலில் டெல்லி காவலர்போர் நினைவுசின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், முப்படை சார்பில் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

Related Stories: