குப்பை வண்டியில் புளி மூட்டைபோல் பயணம் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

* ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?

* சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி

பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமலில் உள்ள உரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கடந்த 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை டெல்லி சென்று திரும்பியவர்களுக்கு மட்டுமே ஆரம்ப கட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் இருப்பது தெரிந்தது. பின்னர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.

நாளடைவில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

குறிப்பாக எண்ணூர், புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ்,  ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி அனைவரும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும், சமூக இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தங்களது கட்டுப்பாட்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்வதில்லை.

குறிப்பாக, அந்தந்த வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் புளி மூட்டைபோல் அடைத்து கொண்டு செல்லப்படுகின்றனர். கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை கூட முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தண்டையார்பேட்டை மண்டலம், 45வது வார்டு பகுதியில் குப்பை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் துப்புரவு பணியாளர்களை நெருக்கமாக அமர வைத்து ஏற்றிச்செல்கின்றனர். கொரோனா பரவும் இந்த நெருக்கடி நேரத்தில் தங்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான வாகன வசதி கூட ஏற்படுத்தி தராதது அலட்சியத்தின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னையில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இதுபோன்ற செயல்கள் மூலம் மேலும் நோய் தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல், மாதவரம் மற்றும் மணலி மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தினசரி பணிக்கு வந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதில்லை. இதனால், குப்பை லாரிகளில் கூட்டமாக வந்து செல்லும் அவலம் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என அறிவுறுத்தும் மாநகராட்சி நிர்வாகம், தங்களிடம் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இதை செய்வதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: