ஆன்லைனில் பிஎச்டி, எம்பில் தேர்வுகள்: யுஜிசி அறிவுரை

சென்னை: பிஎச்டி மற்றும் எம்பில் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த யுஜிசி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் அகமதிப்பீட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்கலைக் கழக தேர்வுகளும் ஒத்திப் போகின்றன. குறிப்பாக பல்வேறு பல்கலைக் கழகங்கள் மூலம் நடத்தப்படும் எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கான தேர்வுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிஎச்டி, எம்பில், மற்றும் வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றை ஸ்கைப் அல்லது இதர செயலிகள் மூலம் நடத்தலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் தேர்வுகளை தள்ளிப்போடாமல் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்திக் கொள்ள முடியும். மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வுகளை ஸ்கைப் அல்லது இதர செயலிகள் மூலம் நடத்திக் கொள்ள முடியும். ஊரடங்கு முடிந்ததும் பல்கலைக் கழகங்கள் தங்கள் நேரடி வகுப்புகளை நடத்த முடியும் என்ற கருத்து இருந்தாலும், தற்போது சேரப் போகும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும். இருப்பினும், ஆன்லைன் தேர்வுகள் மிகவும் முக்கியம், அதனால் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அகமதிப்பீட்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஆலோசனையை ஏற்று தேசிய தேர்வு முகமையும், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து சில பல்கலைக் கழகங்களும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதியை  மே 15ம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளன.

Related Stories: