தடையை மீறிய 383 பேர் கைது; மேம்பாலத்தில் கும்பலாக வாக்கிங் சென்ற மக்கள்: உறுதிமொழி பெற்று எச்சரித்து அனுப்பிய போலீசார்

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தில், தடை உத்தரவை மீறி கும்பலாக வாக்கிங் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உறுதிமொழி பெற்று திருப்பி அனுப்பினர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து வருகின்றனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று ஒரேநாளில் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 383 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 255 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், சேலம் மாநகரில் மட்டும் 137 வழக்குப்பதிவு செய்து, 143 பேர் கைது செய்யப்பட்டதுடன், 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், மாவட்ட பகுதிகளில் 191 வழக்குப்பதிவு செய்து, 240 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தில், இன்று காலை ஏராளமானோர் நடைபயிற்சி சென்றனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கும்பலாக சென்று வந்ததால், உதவி கமிஷனர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார், வாக்கிங் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, கும்பலாக செல்லாமல், சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுக்கவைத்தனர். மேலும், இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள கூடாது எனவும் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: