தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி பலி...சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று வளர்ந்த நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை அச்சுறுத்தி வருகிறது.  மருந்து ஏதும் கண்டுபிடிக்காமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உலகநாடுகள் திணறி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2  மாதங்களாக மக்கள் வெளியில் வராமல் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறையவில்லை. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 27 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார். சென்னை சூளையைச் சேர்ந்த மூதாட்டி  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளார்.

மூதாட்டி மகன் சென்னை  மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளர் பணியாற்றி வருகிறார். மூதாட்டியின் குடும்பத்தில் மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட 8 பேரும் ராஜூவ் காந்தி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீதமுள்ள 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மூதாட்டியின் உடல் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழு பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மூதாட்டி உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: