பச்சை மண்டலத்தில் சேர்ந்தது நீலகிரி; 21 நாட்கள் ஆகியும் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை...பொதுமக்கள் மகிழ்ச்சி

நீலகிரி; தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது. இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.   இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1147 பேர் உயிரிழந்த நிலையில், 8889 பேர்   கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1258 பேர்   குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றால் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா,  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 9 நபர்களும் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை நீலகிரியில் கொரோனா பாதிப்புடன் யாரும் இல்லை. இன்றுடன் 19 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திற்குள் வந்து விடும் என்று நம்பிக்கை  தெரிவித்தார்.  

மாவட்டத்தில் 21 நாட்கள் ஆகியும் புதிதாக யாருக்கும் கோரானா தொற்று பரவாத காரணத்தினால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மாவட்டமாக நீலகிரி உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி  படைத்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மாநிலங்களின் பட்டியலில் ஈரோடு, தூத்துக்குடி  மாவட்டங்களை தொடர்ந்து நீலகிரி சேர்ந்துள்ளது. தமிழகத்தில், இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: