அரசு நிகழ்ச்சியில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் புரிசை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன் ஆகியோர், மேற்கண்ட  பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, கிராமம் முழுவதும் சாலைகளை அடைத்து, பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இதே பகுதியில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் மூலம், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ தேவைகள் உடனுக்குடன் கிடைக்கும்.

காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்புதூர்: பெரும்புதூர் தாலுகாவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரகணக்கானோர் பெரும்புதூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் தங்கி வேலை செய்கின்றனர். தற்போது நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிேய வந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களில் வேலையின்றி, உணவின்றி வடமாநில ஊழியர்கள் பலர் தவிக்கின்றனர்.

இந்நிலையில், பெரும்புதூர் தாலுகாவில் உள்ள வடமாநில ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முகாம் பெரும்புதூர் பகுதியில் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கலெக்டர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், அதிகாரிகள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் உரசியபடி நின்று பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு முன் னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு துறையினர், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் மக்கள் எப்படி கடைபிடிப்பார்கள். இனியாவது புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்றனர்.

Related Stories: