மாநில முதல்வர்கள் கோரிக்கை; வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கபடுமா?...ரயில்வே அமைச்சகம் திட்டம் வைத்துள்ளதாக தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தவித்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்த உத்தரவில், ஊரடங்கால் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்  சிக்கியுள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அவர்களை உரிய அறிவுறுத்தல்களுடன் சொந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்கள் மற்றும் அவர்களது சொந்த மாநிலங்கள் என இரு மாநில அரசுகளும் பரஸ்பர ஒப்புதலுடனேயே சாலை  மார்க்கமாக அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். வைரஸ் அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். குழுக்களாக செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்தலாம்.  பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

அதேபோல், இருக்கையில் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்  கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை கவனிக்க அந்தந்த மாநில அரசுகள் உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இடம் பெற்ற நபர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே,  வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல பல மாநிலங்கள் சிறப்பு ரயில்கள் இயக்ககோரி மத்திய அரசிடம் கோரியுள்ளன.

இந்நிலையில், ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2-ம் கட்ட ஊரடங்கு மே 3-ம் தேதி முடியவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பயணிகள் ரயில் சேவைகள்  மீண்டும் தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றாலும், ரயில்வே இந்த திட்டத்தை அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று வெளியிட்ட டுவிட் பதிவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களளை அனுப்புவதற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கை இறுதியாக அரசாங்கத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு. ஆனால் இந்திய ரயில்வே இயக்கத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதை ரயில் போக்குவரத்து இல்லாமல்  எளிதாக்க முடியாது. ஓரிரு நாட்களில், தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்  எண்ணிக்கை ராஜஸ்தான் அரசுக்கு கிடைத்துள்ளது. அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேபோல், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தனது மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் தேவை என்று  தெரிவித்தார். அனைத்து மக்களையும் அழைத்து வர ரயில் சேவை அவசியம் என்றார்.

Related Stories: