அடுத்தடுத்த உயிரிழப்பால் சோகத்தில் ஆழ்ந்த பாலிவுட்; பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலகுறைவால் காலமானார்...பல்வேறு தரப்பினர் இரங்கல்

மும்பை: பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலகுறைவால் மும்பையில் காலமானார். 67 வயதான நடிகர் ரிஷி கபூர், 1970ல் தனது தந்தை ராஜ் கபூருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1973-ல் வெளியான பாபி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ரிஷிகபூர் நடித்தவர். தனது, நடிப்பில் ரசிகர்களை ஈர்த்த ரிஷி கபூருக்கு Mera Naam Joker திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.

இதற்கிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ரிஷி கபூர், சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்து 11 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடு  திரும்பினார். இதன் பின்னர் ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து Sharmaji Namkeen என்ற படத்தில் நடித்து வந்தார். பின்னர் உடல்நிலை ஒத்துழைக்காததால் அப்படத்தின் ஷீட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை நடிகர் ரிஷி கபூரின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஹச்.என்.ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று  காலாமானார்.  இத்தகவலை நடிகரும் அவரது சகோதரருமான ரந்தீர் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு நீது கபூர் என்ற மனைவியும் ரன்பீர் கபூர் என்ற மகனும் உள்ளனர்.

நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று உயிரிழந்த நிலையில், தற்போது ரிஷி கபூர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 2 நடிகர்கள் உயிரிழந்ததால் பாலிவுட் நடிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories: