எந்தெந்த தொழில்களை தொடங்க அனுமதிக்கலாம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள்அறிக்கை அனுப்ப வேண்டும்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: எந்தெந்த தொழில்கள், பணிகளை படிப்படியாக  தொடங்க அனுமதிக்கலாம் என்பது பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் ஆகியோருடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கொரோனாைவ கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனோ வைரஸ் நோய் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்,இந்த ஆலோசனை கூட்டம் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 நோய் பரவலின் தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்ெதந்த தொழில்கள், பணிகளை படிப்படியாக தொடங்கலாம் என்பது பற்றி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள் விரிவான அறிக்கையை அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். நோய் தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் பகுதிகளில் நோய் பரவலை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ராயபுரம், திரு.வி.க.நகர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த ஆறு மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு களப்பணி குழுவும், மற்ற 9 மண்டலங்களில், 3 மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்படுகிறது.

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் ஒரு காவல்துறை அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சியை சார்ந்த உயர் அலுவலர் மற்றும் சுகாதார துறையை சார்ந்த ஒரு உயர் அலுவலர் அடங்கிய குழுவாக இந்த குழுக்கள் அமைக்கப்படும். இதுபோன்ற 6 சிறப்பு குழுக்கள் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கும் அமைக்கப்படும். நோய் தொற்று தடுப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது, அப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உறுதி செய்ய வேண்டும். நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது, இப்பகுதிகளில் நோய் தொற்றுக்கான சோதனையை தீவிரப்படுத்தி, விரைவாக அதன் முடிவுகளை பெறுவது உள்ளிட்டவை, இந்த குழுக்களின் முக்கிய பணிகளாகும்.

நோய் தடுப்பு பகுதிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை எனில், நகரும் கழிப்பறை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். சென்னை மாநகரில் நோய் தொற்றுக்கான சோதனை செய்வதற்கு தற்போதுள்ள நடமாடும் சோதனை வாகனங்கள் 3ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும். நோய் தொற்று உள்ள பகுதிகளில் சோதனைகள் மேலும் அதிகப்படுத்தப்படும். நோய் தொற்று உள்ளவர்கள் வசிக்கும் தெருக்களில் உள்ளவர்கள் அனைவரையும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பகுதிகளில் மக்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் போன்றவை வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் போன்ற மருந்துகள் வழங்கப்படும்.

நோய் தடுப்பு பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து தடையின்றி வழங்குவதற்கான பிரத்யேகமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டிய சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். நோய் தடுப்பு பகுதிகளில் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய் உள்ளவர்களின் உடல்நிலையும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நிலையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: