ஜல் சக்தி துறையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இணைத்ததை ரத்து செய்ய வேண்டும்: கட்சி தலைவர்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்ததை ரத்து செய்யுமாறு கட்சி தலைவர்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய அரசை முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு  அமைச்சரவையை உடனடியாக கூட்டி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:   மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகமாக இணைத்து இருப்பது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிரந்தரமாக பறித்துக் கொள்ளும் பாஜக மத்திய அரசின் துரோகச் செயலாகும்.

தமிழ்நாடு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:  காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் வளத்துறையுடன் இணைத்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலாகும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதன் கட்டுப்பாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்னையை கையாளும் பொறுப்பைத் தருவது நியாயமாக இருக்காது. இதுபோல விவசாய சங்கங்களும்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Related Stories: