×

திருவண்ணாமலையில் ஊரடங்கு தொடர்வதால் பொலிவிழந்து காணப்படும் சுற்றுலாத்தலங்கள்

திருவண்ணாமலை: தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக, கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒரு மாதத்துக்குள் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. எனவே, ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை போன்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

பொன்விழாக் கண்ட சாத்தனூர் அணை மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். எண்ணற்ற சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வதற்காக எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன. எனவே, விடுமுறை நாட்களில் சாத்தனூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக, கோடைகால விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கைக் கொடையாக அமைந்துள்ள ஜவ்வாதுமலை மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதையில் பயணித்து ஜவ்வாதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள இயற்கை எழிலையும், கோலப்பன் ஏரி படகு குழாம், பீமன் நீர்வீழ்ச்சி, பொழுதுபோக்கு பூங்காக்கள் என எண்ணற்ற இடங்களை சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

தற்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சுற்றுலாத்தலங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா தலங்களில் உள்ள பூங்காக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியதும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் குதூகலமான சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ஊரடங்கு உத்தரவு இனிவரும் காலங்களில் படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், சுற்றுலா தலங்களுக்கு பொது மக்களின் வருகை கடந்த காலங்களைப் போல இருக்காது. மக்கள் ஒன்று கூடும் இடங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்படும் நிலையில், சுற்றுலா பயணங்கள் அடுத்த சில ஆண்டுகள் பொதுமக்களால் தவிர்க்கப்படும். அதனால், சுற்றுலா தலங்களின் நிலை பழையபடி திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.

Tags : Tourist places ,Thiruvannamalai Thiruvannamalai , Tourist ,places , Thiruvannamalai
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...