ஊரடங்கா அப்புடீனா..... தினமும் கிடா வெட்டி விருந்து ஒரே இலையில் சாப்பாடு: இளைஞர்கள் கும்மாளம் வீடியோ வைரலால் பரபரப்பு

தஞ்சை: தஞ்சை அருகே ஒரு கிராமத்தில் இளைஞர்கள் சிலர் ஊரடங்கு பற்றி கவலை இல்லாமல் தினமும் கிடா வெட்டி சமைத்து, ஒரு இலையில் சாப்பிட்டு கும்மாளமிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் தனித்து இருக்க வேண்டும் என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தஞ்சை அருகே வல்லத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனால் வல்லம் மற்றும் அருகில் உள்ள பல ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் வல்லத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சென்னம்பட்டியில் தினமும் கிடாவெட்டி கறி விருந்து நடந்து வருகிறது. பெரிய வாழை இலையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து கொண்டு கறி சோறு சாப்பிடும் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கை மீறி தினமும் காட்டுப்பகுதியில் இந்த கறிசோறு கொண்டாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாகவும்,இந்த இளைஞர்கள் கறி விருந்துடன் சாராயத்தையும் ஒரு பிடி பிடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இங்கிருந்து பல ஊர்களுக்கு சாராயம் கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இங்கு பக்கத்து ஊரை சேர்ந்த பலர் சாராயம் குடிக்க வந்து செல்வதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதாக இப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: