வாகனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததன் காரணமாக சென்னையில் காற்று மாசுபாடு மேலும் குறைந்தது: ஊரடங்கு உத்தரவில் சுத்தமான காற்றை சுவாசிக்கும் மக்கள்

சென்னை: வாகனங்கள் தொழிற்சாலைகள் இயங்காததன் காரணமாக, சென்னையில் காற்று மாசுபாடு மேலும் குறைந்துள்ளது. இதனால் முன்பைவிட தற்போது சுத்தமான காற்றை பொதுமக்கள் சுவாசிக்கின்றனர்.  கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை இயங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.  சென்னையில் நாள்தோறும் 30 லட்சம் வாகனங்கள் இயக்கப்படும். ஒவ்வொரு சிக்னலிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். மேலும் இத்தகைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுகலந்த புகை காற்று மாசுபாட்டுக்கு ஒருகாரணமாகும்.

இதேபோல் சென்னையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்தும் நச்சுக்காற்று வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து சாலைகளிலும் எப்போதாவது ஒருசில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதுபோன்ற காரணங்களினால் சென்னையில் கடந்த மாதத்திலிருந்து காற்று மாசுபாடு குறைந்து வருகிறது. தற்போது மேலும் மாசுபாடு குறைந்துள்ளது. இது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. அவை முறையே ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆகும்.

இங்கு காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், மாசுபாடு மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.  கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஆலந்தூர் பஸ் ஸ்டாப்பில் காற்றின் அளவு சோதனை செய்யப்பட்ட போது 2.5 மைக்ரான் அளவு 40.38 ஆக இருந்தது. இதுவே இம்மாதம் 26ம் தேதி (நேற்று முன்தினம்) 9.47 ஆக குறைந்துள்ளது. இதேபோல் நாடுமுழுவதும் காற்றுமாசுபாடு குறைந்துள்ளது. இதுநாள் வரை அதிகமான மாசு நிறைந்த காற்றை மக்கள் சுவாசித்து வந்தனர். தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முன்பைவிட சுத்தமான  காற்றை சுவாசிக்கச்செய்துள்ளது.

காற்று மாசுபாடு விபரம்

இடம்                            2.5மைக்ரான் அளவு

                        பிப்-26    மார்ச்-26    ஏப்-26

ஆலந்தூர்

பஸ் ஸ்டாப்    40.38    32.25    9.47

மணலி கிராமம்    20.12    15.6    5.52

மணலி                      63.97    43.16    19.27

வேளச்சேரி    31.88    23.67    7.21

கோவையிலும் காற்று மாசுபாடு குறைந்தது

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஏராளமான வாகனங்கள் இயங்குகிறது. இதேபோல் பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இவையும் இயங்கவில்லை. இதன்காரணமாக கோவையிலும் காற்று மாசு தற்போது குறைந்துள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி 26ம் தேதி, 2.5 மைக்ரான் அளவு 40.15 ஆக இருந்தது. இது மார்ச் 26ம் தேதி 26.74 ஆகவும், ஏப்ரல் 26ம் தேதி 23.89 ஆகவும் குறைந்துள்ளது.

Related Stories: