ஓ சாமீயோவ்... எலிங்க எல்லாம் புகுந்து மதுபாட்டிலை காலி பண்ணிட்டதுங்கோ...மதுக்கடையில் காணாமல்போன ‘சரக்குக்கு’ கண்காணிப்பாளர் அளித்த ‘லகலக’ பதில்

திருமலை: ஊரடங்கு எதிரொலியால் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கடைக்குள் புகுந்து 78 மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக கண்காணிப்பாளர்  அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது. தினந்தோறும் மது அருந்தி வந்தவர்கள் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. இதில், 50க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்கள் 500க்கும், 500க்கு விற்கப்பட்டது 4 ஆயிரம் என பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு மதுக்கடை கண்காணிப்பாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதனால் மாநில அரசு மதுக்கடைகள் மற்றும் பார்களில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு கடையில் எவ்வளவு இருப்பு இருந்தது? தற்போது எவ்வளவு உள்ளது? என்பது குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டது.  இதன் காரணமாக ஆந்திர மாநில கலால் துறை போலீசார் மதுக்கடைகள் மற்றும் பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரகாசம் மாவட்டம், அந்தங்கி மண்டலத்தில் 30 மதுக்கடைகள் உள்ளது. இதில் 13 கடைகளில் இருப்பை காட்டிலும் மதுபாட்டில்கள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இதில் ஒரு கடையில் 78 மதுபாட்டில்களை எலிகள் கடித்து மதுபானங்களை குடித்துவிட்டதாக கண்காணிப்பாளர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து மதுக்கடை கண்காணிப்பாளர் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி அவரிடம் எலிகள் கடித்து குடித்ததாக கூறப்பட்ட மதுபாட்டில்களுக்கான பணத்தை அரசுக்கு செலுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று மாநிலம் முழுவதும் எத்தனை கடைகளில் எலிகள் மது குடித்தது என்று தெரியாத நிலையில் ஊரடங்கு முடிவதற்குள் அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சியினர் மற்றும் கண்காணிப்பாளர் இணைந்து இருப்பு உள்ள மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அதனை சரிசெய்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதை  மறைக்க ஆளுங்கட்சியினர் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக நாடகம் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: