இத்தாலியில் தணிந்தது கொரோனா பாதிப்பு: மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பிரதமர் அறிவிப்பு

இத்தாலி: இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், மே 4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இத்தாலியில், கடந்த மாதம் 18ம் தேதியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருந்தது. தற்போது வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நேற்று அங்கு 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 644 ஆக உள்ளது. 6 வாரங்களுக்கு பிறகு பலி எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.

கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வருவதால் மே 4-ம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும் என பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார். கட்டுமானத்துறை, உற்பத்தி துறை மற்றும் மொத்த விற்பனையகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பார்கள், உணவகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால் அங்கேயே அருந்த அனுமதி இல்லை. பார்சல் வாங்கி வீடுகளுக்கு எடுத்துச் செல்லலாம். அந்தந்த பிராந்தியங்களுக்குள் மக்கள் பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து பயணிக்கலாம். இறுதிச்சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆனால், அதிகபட்சம் 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் கூறி உள்ளார்.

Related Stories: