தமிழகத்தில் 2 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பு,..ஊரடங்கால் கட்டுமான தொழிலில் 25 ஆயிரம் கோடி முடங்கியது: தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: ஊரடங்கால் கட்டுமான தொழிலில் 25 ஆயிரம் கோடி முடங்கியது. இதனால் 2 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி வருவாய் இழப்பு தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான தொழிலை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

இது குறித்து அனைத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராகவன் கூறியதவாது:

தமிழகத்தில் 50 ஆயிரம் பொறியாளர்கள், 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள், 40 லட்சம் மறைமுக தொழிலாளர்கள் அலுவலக பணியாளர்கள் கட்டுமான உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என ஒன்றரை கோடி பேர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்துள்ள கட்டுமானத்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள காலங்களில் சுமார் 25 ஆயிரம் கோடி அளவிலான முதலீடு கட்டுமான தொழிலில் முடங்கி உள்ளது. இதன் மூலமாக தமிழகத்துக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து கட்டுமானத்துறையை மீட்டெடுக்க வேண்டும்.கட்டுமான பணி இடங்களில் இருப்பு வைக்கப்பட்ட சிமென்ட் அனைத்தும் உபயோகப்படுத்த முடியாது. அவை அனைத்திற்கும் ஈடாக சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மாற்று முட்டைகள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். அரசு 6 மாத காலத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் மின்சாரக் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டிற்கு ஜிஎஸ்டி வரியை 50 சதவீதமாக ஆக குறைக்க வேண்டும்.

இரண்டு ஆண்டிற்கு கட்டுமான நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் சிசி பெறும் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் ஆறு மாத காலத்திற்கு கட்டுமானத்துறை கடன்களுக்கு வட்டி ரத்து செய்ய வேண்டும். இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் கட்டுமானத்துறை இன்னும் ஆறு மாதங்களில் மீண்டெழும் என்பதில் ஐயமில்லை இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: