பக்க விளைவுகளுக்கு வாய்ப்பு; கொரோனா நோயாளிகளுக்கு Hydroxychloroquine மருந்தை பயன்படுத்தாதீங்க...கனடா சுகாதாரத்துறை எச்சிக்கை

ஒட்டாவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என கனடா சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சீனாவில்  முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு  நாடுகளை சேர்ந்த 206,988 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,994,722 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 878,707 பேர்  குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பாதிப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது. மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்வதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார்.  ஆனால், இந்த மருந்துகளால் கொரோனா நோயாளிகளுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை  எச்சரித்தது. நோயாளியின் உடல்நலத்தை நன்கு பரிசோதனை செய்த பிறகு தான் இதுபோன்ற மருந்துகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என  அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மலேரியா தடுப்பு மருந்தான  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்  என கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு மருந்துகளால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க  வேண்டாம் என கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: